தமிழர் வட்ஸ் அப் – பேஸ் புக் பக்கங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில வாரங்களாகவே சகோதர மொழி (சிங்கள) பாடகியொருவரின் பாடலொன்று மிகப்பிரபலமாக பகிரப்பட்டுவருவதை அனைவரும் கண்டிருப்பீர்கள்.
“மெனிக்கே மகே ஹித்தே” என்று தனது கிறங்கடிக்கும் குரலினால் பாடலைத்தொடங்கும் பாடகி, “இரவில் ஒன்றே ஒன்று” – என்று தமிழுக்குள் நுழைந்தவுடன் சிலிர்த்துப்போகும்.
அப்படியொரு குழந்தைத்தனமான உச்சரிப்பும் வழுக்கி வழுக்கிச்செல்லும் தமிழும் கேட்பவர்கள் எவரையும் வசீகரித்துவிடும்.
இந்தப்பாடகியின் பெயர் யொஹானி. இவரது தந்தை யார் என்று தெரியுமா? 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா.
இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தின் 59 ஆவது டிவிஷன் படையணிக்கு தலைமை தாங்கியவர். மணலாறு பகுதியின் ஊடாக விடுதலைப்புலிகளின் எந்த நகர்வையும் முறியடிப்பதற்காக இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவினால் விசேடமாக நியமிக்கப்பட்டவர்.
இந்த நடவடிக்கைக்கு முன்னர், கிழக்கில் 55 ஆவது டிவிஷன் படையணிக்கு தலைமை வகித்தவர். அப்போது கேணல் தர அதிகாரியாக மாவிலாறு பிரதேசத்தின் மீதான நடவடிக்கையை ஒழுங்கமைத்தவர்.
கிழக்கு விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதற்காக பிரிகேடியர் தர பதவி உயர்வைப்பெற்றவர். முன்னர், வவுனியாவில் நிலைகொண்டிருந்து இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியை ஒருங்கமைத்தவர்களில் முக்கியமானவர்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் இராணுவத்தில் இணைந்துகொண்ட இவர், முன்னாள் விமானப்பணிப்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் பாடகி யொஹானி. இளையவர் மருத்துவராக கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்.
யொஹானியின் “மெனிக்கே மகே ஹித்தே” முதலில் வெளிவந்தபோது மிகப்பெரியளவில் பிரபலமானது. தற்போது யு டியூபில் சுமார் ஐம்பது மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்தப்பாடலை தமிழிலும் பாடவேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பின்னர், தமிழ் பாடல் வெளியானது. அந்தப்பாடலும் தற்போது யு டியூபில் எட்டு மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் கணக்கியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யுள்ள பாடகி சிறிது காலம் முகாமையாளராக பணியாற்றியுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இசை நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.
