யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக இளைஞர் ஒருவர் முகவர் ஒருவரைத் தொடர்புகொண்டபோது, 80 லட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையைக் கொண்டு நேரடியாக வந்து சந்திக்க வேண்டும் என்று அந்த முகவர் தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய இளைஞர் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுவிட்டு வங்கி அறிக்கையுடன் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்கு முகவரைச் சந்திப்பதற்கு வந்துள்ளார்.
ஆரியகுளம் உள்ள பகுதியில் இளைஞன் நின்றபோது கார் ஒன்றில் வந்த கும்பல் இளைஞரைக் கடத்திச் சென்றுள்ளது. இளைஞரை மிரட்டிய அந்தக் கும்பல் வங்கிக் கணக்கில் இருந்த 80 லட்சம் ரூபா பணத்தை வேறாரு வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு இளைஞரைக் கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
பணத்தை இழந்த இளைஞர் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸார், பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குக்கு உரிய பெண் ஒருவரைக் கைது செய்தனர். அதன்பின்னர் இளைஞரைக் கடத்திய குற்றச்சாட்டில் மேலும் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்ட பணம், அதிலிருந்து வெறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை மீட்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இளைஞரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
