கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியினர், ஜே.வி.பியின் உட்பட மேலும் சில தரப்பினர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு துறைசார் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அரச பங்காளிக்கட்சிகள்கூட போர்க்கொடி தூக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் முறையாக அனுமதி பெறாமல்தான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் இது இறுதி உடன்படிக்கை அல்ல, ஆரம்பக்கட்ட நகலில்தான் கைச்சாத்திடப்பட்டுள்ளது என ஆளுந்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
