‘யுகதனவி மின் உற்பத்தின் நிலைய ஒப்பந்தம்’ – பங்காளிகளிடம் பஸில் திருத்தம் கோரல்

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையம், உரப்பிரச்சினை உட்பட 12 காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்றிரவு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தின் நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருடனும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புகளை நடத்தியிருந்தனர்.

எனினும், உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு பங்காளிக்கட்சி தலைவர்கள் சந்தர்ப்பம் கோரினர். கடிதமும் அனுப்பிவைத்தனர். இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டம் அல்லது ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கதைக்குமாறு ஜனாதிபதி அறிவித்து, பேச்சுக்கு சந்தர்ப்பம் வழங்க மறுத்துவிட்டார்.

இதனால் கடுப்பாகிய பங்காளிக்கட்சி தலைவர்கள், தொழிற்சங்க பிரமுகர்களுடன் சந்திப்புகளை நடத்தியதுடன், இப்பிரச்சினையை மக்கள் மயப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தனர். ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் இன்று (29) முதல் கூட்டங்களையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் நேற்று மாலை பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு விடுத்திருந்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

” யுகதனவி, உரப்பிரச்சனை, கொவிட் உட்பட 12 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது எனவும், அடுத்துள்ள 2 உடன்படிக்கைகளே முக்கியமானவை எனவும் நிதி அமைச்சர் எங்களுக்கு தெளிவுபடுத்தினார். அந்த உடன்படிக்கைகளுக்கு எமது யோசனைகளையும் வழங்குமாறு கோரினார். இது தொடர்பில் நாம் கலந்துரையாடி முடிவை அறிவிப்போம். சந்திப்பு சாதகமாக அமைந்தது.

நாம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடைபெறும். அதில் மாற்றம் இல்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles