“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனது மாணவன். ஆனால் தற்போது அவர் மாறிவிட்டார். ஒரு ஆசிரியராக இது தொடர்பில் அதிர்ச்சியாக உள்ளது.” – என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
குருணாகலை, குளியாபிட்டியவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜி.எல்.பீரிஸ்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
ராஜபக்சக்களின் சகா எனவும், ‘சட்டம்பிறால’ எனவும் போட்டு தாக்கியிருந்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது பற்றி பீரிஸிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க எனது மாணவன். பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது ஒழுக்கமாக இருந்தார். சூழ்நிலைக்கேற்ப பேசுவார். ஆனால் குருணாகலைக் கூட்டத்தில் காட்சிதந்த ரணில் முற்றிலும் மாறுபட்டவர். எல்லோரையும் தாக்கினார். பல்லைக்கழகத்தில் நான் பார்த்த ரணில் அல்லர் இவர். எனக்கே வியப்பாக இருந்தது…எது எப்படி இருந்தாலும் விமர்சனங்களைக்கண்டு பின்வாங்கப்போவதில்லை. எமது பயணம், திட்டம் வெற்றி என்பதால்தான் விமர்சனம் வருகின்றது. – என்றார்.