ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒரே மேடைக்கு வந்து, ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட்டால், தேர்தலில் களமிறங்குமாறு கட்சி கோரிக்கை விடுத்தால் , எனக்கு வாக்களித்த மக்கள் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயார். கட்சி கோரிக்கை விடுக்காவிட்டால் போட்டியிட மாட்டேன். அதேபோல இரு தரப்பும் இணையாவிட்டாலும் களமிறங்கமாட்டேன்.” எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
 
		 
                                    









