“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை. சஜித் பிரேமதாச பக்கமே நாம் நிற்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகஜருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மஸ்கெலியா நகரில் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த மக்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ 2019 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆரம்பிப்பதற்கு மலையக மக்கள் முன்னணியும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முன்நின்று செயற்பட்டது. இதனால் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து யாரோ ஒருத்தர் விலை போனதால், நானும் அவ்வாறு கட்சியிலிருந்து வெளியேறி செல்வேன் என சொல்வது கேலி கூத்தான விடயமாகும்.
அவர் சொன்ன விடயம் முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். அவர் விருப்பத்திற்கு எதை கூறினாலும் அது நடக்காது. எங்களுக்கு அப்படி அவரை போல் கட்சி தாவும் அவசியம் இல்லை.
தற்போதைய ஆய்வுகளின் படி சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அடுத்தது அநுர குமார திசாநாயக்க இருக்கின்றார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பட்டியலிலேயே இல்லை. எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.