சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
” இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசு தவறியுள்ளது. எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன. பல கட்சிகள் மாநாட்டில் பங்கேற்காமைக்கு இதுவும் ஓர் காரணமாகும்.” – என சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கீடு செய்த நிதி அமைச்சர் பஸில், ” மன்னிக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை , எமக்கு இன்னமும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.” என கூறினார்.
” அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து அது பற்றி விளக்கம் கேட்கலாம்.” என இதன்போது ரணில் குறிப்பிட்டார்.
” அறிக்கை எமக்கு கிடைக்கவில்லை என்பதை பொறுப்புடனேயே நான் கூறுகின்றென்.” என இதற்கு நிதி அமைச்சர் பதிலளித்தார்.
” பிரதிநிதியை அழைத்து அறிக்கையை வழங்குமாறு நாம் கோருவோன்.” என ரணில் குறிப்பிடுகையில்,
” எமக்கு டிராப்ட் (வரைவுநகல்)தான் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ” என்று பஸில் குறிப்பிட்டார்.
” அறிக்கை வரவில்லை என்றீர்கள், இப்போது டிராப்ட் வந்துள்ளதை ஏற்றுக்கொள்கின்றீர்கள்.” என ரணில் வாதிட்டார்.
” உங்களுக்கு டிராப்டா வேண்டும், அதனை வழங்கமுடியாது” என பஸில் அறிவித்தார்.
” எனக்கு வழங்க வேண்டாம். அதனை நாடாளுமன்றத்தில் சமப்பிர்க்கவும்.” என கடுந்தொனியில் பதில் வழங்கினார்.