ராஜபக்சக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திணறுகின்றார். எனவே, தான் மஹிந்த பக்கமா, ரணில் பக்கமா அல்லது மக்கள் பக்கமா என்பதை சஜித் தெரியப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் ஆணையின் பிரகாரம் தேசிய மக்கள் அரசாங்கம் செயல்படும் எனவும், கள்வர்களை பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு தமக்கு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியவை வருமாறு,
‘ ராஜபக்சக்களை பிடிக்கும்போது சஜித்தும் திணறுகின்றார். யோசிதவை கைது செய்தபோது சஜித் அணி உறுப்பினர் உளறுகின்றார். இரு தரப்பு கள்வர்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.
ஒன்றாக கள்வர்களை பாதுகாத்துக்கொண்டு இன்று சுங்கத்திணைக்களம் பற்றி கதைக்கின்றனர். துறைமுகத்தில் இருந்து உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.
மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையுடன் விளையாட வரவேண்டாம். மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது. எனவே, மக்கள் வழங்கிய ஆணையின் பெறுமதி எமக்குதான் தெரியும். எனவே மக்கள் ஆணையை மீறும் வகையில் செயற்படமாட்டோம்.
சஜித் பிரேமதான மஹிந்த பக்கமா, ரணில் பக்கமா அல்லது மக்கள் பக்கமா என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும். சகாக்களை களமிறக்கி விமர்சனங்களை முன்வைப்பதைவிட, தகவல்கள் இருந்தால் அவற்றை வெளியிட்டு முறைப்பாடுகளை முன்வைக்க முன்வருமாறு சஜித்துக்கு சவால் விடுக்கின்றேன்.” – என்றார்.










