டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் மனோ கணேசன், திகாம்பரம், வேலுகுமார் ஆகியோர் இரட்டை வேடம்பூண்டுள்ளனர் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் டிலான் பெரேரா மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத்தில் நேற்று ரிஷாட் பதியுதீனுக்காக முஜிபூர் ரஹ்மான் உரையாற்றும்போது மனோ கணேசன், திகாம்பரம், வேலுகுமார் ஆகியோர் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். மறுபுறத்தில் நீதி வேண்டும் என முறைப்பாடு செய்கின்றனர். இது தமிழ் ஊடகங்களுக்காக அரங்கேற்றப்படும் நாடகமாகும். ராதாகிருஸ்ணன் மட்டுமே சிறுமிக்காக குரல் எழுப்பினார்.
மலையக மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றம் வந்த மனோ கணேசன், திகாம்பரம், வேலுகுமார் ஆகியோர் இன்று யார் பக்கம் நிற்கின்றனர்? மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” – என்றார்.