ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் செயற்படுகின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சி.ஐ.டியினர் முன்னெடுத்துவரும் விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை பிற்போடுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு உள்ள அதிகாரம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் விமல்வீரவன்ஸ கூறியதாவது,
” சஹ்ரான் குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை திட்டமிட்ட அடிப்படையில் கடந்த அரசாங்கம் மூடிமறைத்தது. இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று சாட்சியமளித்துவருகின்றனர்.
ஆதாரங்கள் சகிதமே ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்படபோகின்றார் என பதில் பொலிஸ்மா அதிபருக்கும், சி.ஐ.டியினருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் கடிதம் எழுதுகின்றார்.
குற்றவாளியாக இருந்தாலும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை கைதுசெய்யவேண்டாம் என்பதனையே அவர் கடிதம்மூலம் கூறமுற்படுகின்றார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு உள்ள அதிகாரம் என்ன? குற்றவியல் சட்டத்தின் பிரகாரம், குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது.
இப்படியே போனால் நாளை ரிஷாட்டின் தம்பியை விடுதலை செய்யுமாறுகூட கோரலாம். எனவே, சுயாதீனம் என்ற போர்வைக்குள் இருந்துக்கொண்டு நாட்டில் சட்டம் செயற்படுவதை இப்படிதான் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்.” – என்றார்.