இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் பேசியபோது, இரு நாடுகளுக்கும் இடையே “சமநிலை மற்றும் விரிவான” சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
“ரிஷி சுனக்குடன் பேசுவதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவரை வாழ்த்துகிறோம். எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம். ஒரு விரிவான மற்றும் சமநிலையான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் முன்கூட்டிய முடிவின் முக்கியத்துவத்தையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் கூறினார்.
ரிஷி சுனக், பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இருதரப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதால், “இரண்டு பெரிய ஜனநாயகங்கள்” என்ன சாதிக்க முடியும் என்பதில் தான் உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனகாந்த் அறிவிக்கப்பட்டதையடுத்து, உலகப் பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்தார்.