பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்கி, எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை செயற்படுத்தினால், தற்போது நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலை உருவாகும் என மனுதாரர்கள் மன்றில் கடந்த முறை சுட்டிக்காட்டினர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் அடங்கலாக 52 தரப்பினர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பிரதிவாதிகளை ஜுன் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.