“ அடுத்த பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை இந்து கலாசார நிலைய மண்டபத்தில் இன்று 17.03.2024 நடைபெற்ற இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பதுளை மாவட்டத்தில் சுற்றுலாப் பிரதேசத்தில் தோட்டக் காணிகளை கையகப்படுத்தியதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் காணிகளில் உரிமை வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு பத்து பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட வேண்டும். அவர்களது பாரம்பரிய காணிகளை தோட்ட முதலாளிகளால் சுவீகரிக்க முடியாது.
தற்போதுள்ள காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளம் போதாது, 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.
இன்றைய பிரகடனமாக மூன்று விடயங்கள் நிறைவேற்றப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
முதலாளிமார் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா
