பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று (29) அறிவிக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்க எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தன.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செயற்படுத்தினால், தற்போது கூட நட்டத்தில் இயங்கும் தமது நிறுவனங்கள் முழுமையாக செயலிழக்கும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடாமல் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமையினால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்ட நீதிபதிகள் குழுாம், வழக்கு மீதான விசாரணை மீண்டும் நாளை மறுதினம் நடைபெறும் என அறிவித்தது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார , தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் அடங்கலாக 52 தரப்பினர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.










