பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை மீறும் பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தொழில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த தோட்டங்களை அரசு பொறுப்பேற்காது எனவும், குத்தகை உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவந்து புதிய குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் தோட்டங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
அரசாங்கத்தினால் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் தோட்ட கம்பனிகளை குத்தகைக்கு பெறுவதற்கு ஏற்கனவே பல புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் தோட்டங்களை பொருத்தமான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்துக்கு சொந்தமான 22 பெருந்தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.