மலையகத்தில் தனி வீடுகள் அமைக்கப்படும் என மார்தட்டிய என்.பி.பி. ஆட்சியாளர்கள், தற்போது லயன் வீடுகளுக்கு பெயின்ட் பூசும் நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
‘ மலையக அரசியல்வாதிகளை என்.பி.பி. காரர்கள் கடந்தகாலங்களில் கடுமையாக விமர்சித்துவந்தனர். மாற்றம், மாற்றம் எனவும் கூவினர். அதனை நம்பி முகம் தெரியாதவர்களுக்குகூட வாக்களிக்கப்பட்டது.
இப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் லயன்களுக்கு பெயிட் பூசுகின்றனர் .
மலையக மக்களாகிய எங்களுக்கு சலுகை அசியல் வேண்டாம் . உரிமை சார்ந்த அரசியலே தேவை. லயத்திற்கு சுன்னாம்பும் தகரமும் மாற்ற வேண்டாம். சொந்த நிலத்தில் தனி வீடு திட்டமே வேண்டும்.
லயத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலை திட்டத்தை தொடர்ந்தால் உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த நாம் தயங்க மாட்டோம் எனவே உடனடியாக இந்த வேலையை நிறுத்திவிட்டு தனி வீடு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.