‘ லயன் அறைகளில் இன்னும் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காணலாம். ”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையிலான சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது சஜித் மேலும் கூறியவை வருமாறு,
” நமது நாட்டில் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60 சதவீதம் பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர். தேயிலைத் தோட்ட காணிகளில் 30 சதவீதம் அல்லது 40 சதவீதம் ஆனவையே இவர்களுக்கு உரித்துடையதாக காணப்படுகின்றன.
சிறிய அளவிலான காணிகளை வைத்திருப்பவர்கள் பெரும் பங்களிப்பைப் பெற்றுத் தரும்போது, பெரும் காணி உரிமைகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகின்றன.
இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காணலாம்.
ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும். பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.










