லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபம் சில விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நுழைவாயில் கதவை நேற்றிரவு உடைத்துக்கொண்டு உள்சென்ற நபர்கள் , ஆலயத்தின் முன்றலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்த புனித செபஸ்தியார் சிலையை அகற்றி அதனை எல்டராடோ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் கொண்டு சென்று நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்


குறித்த விடயம் சம்பந்தமாக பிரதேச மக்கள் லூணுகலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த பொலிஸார் , ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன், பதுளை குற்றவியல் பிரிவின் தடயவியல் பொலிஸாரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கியமாக வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே சில விசமிகள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராமு தனராஜா
