” உள்நாட்டு போரால் வடக்கு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள், எனவே, வடக்கில் மீண்டுமொரு பலமான ஆயுத போராட்டம் உருவாவதற்கான சாத்தியம் இல்லை, அதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்றே கூறவேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் பல்லின சமூகம் வாழ்கின்றது, பல கலாசாரம் இருக்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் இவர்களுக்கிடையில் நல்லிணக்கம், ஐக்கியம் என்பது மிக அவசியம். போர் முடிவடைந்த பின்னர் நல்லிணக்க அமைச்சுகூட உருவாக்கப்பட்டது. அரசியல் செய்வதாக இருந்தால் அவர்களுக்கு இங்கு இன ஐக்கியம் இருக்ககூடாது, அதனால் அரசியல் ரீதியில் மக்களை பிளவுபடுத்தினர்.
2009 இல் போர் முடிவடைந்த பிறகு ஒன்றரை தசாப்தகாலத்துக்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெறும் என நினைத்தீர்களா? எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஆட்சியை பிடிக்கவேண்டிய தேவைப்பாடு இருந்தது.
2015 இல் ஆட்சியை இழந்த பின்னர் வேலையை மீண்டும் ஆரம்பித்தனர், வடக்கில் மீண்டும் ஒரு போர் பற்றிய தகவல்களை பரப்பினர். புலிகளின் நிழல் என்றெல்லாம்கூட நிறைய செய்திகள் உருவாக்கப்பட்டன.
போரை முடிவுக்கு கொண்டுவந்த உங்களுக்கு (முப்படையினர்) புலிகள் அமைப்பு மீள வருவது தொடர்பில் போர்சார்ந்த கருத்தொன்று இருக்கலாம், எனக்கு அரசியல் கருத்தொன்றும் உள்ளது. அதாவது வடக்கில் மீண்டும் பலமான ஆயுதக்குழுவொன்று உருவாவதற்கான சாத்தியம் மிகக்குறைவு, அதற்கு இடமில்லை.
ஏனெனில் போரால் வடக்கு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள், எந்நாளும் போரை எதிர்கொண்டனர், ஆயுதக்குழுக்களிடையில் மோதல் இருந்தது, இந்திய இராணுவத்துடன் மோதல் இருந்தது, 30 வருட போரால் வடக்கே பெரிதம் பாதிக்கப்பட்டது. அங்குள்ள தாய்மாருக்கு தமது பிள்ளையை படிக்க வைக்க வேண்டும், சிறந்த வேலைக்கு அனுப்ப வேண்டும், தமது பிள்ளைகளை மணம்முடித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காதா? ஆனால் வடக்கு இளைஞர்கள் யுத்தத்துக்காகவே பிறந்தவர்கள் என்ற எண்ணம் தெற்கில் விதைக்கப்படுகின்றது.
2015 இற்கு பிறகே புலிகளின் எழுச்சி பற்றி அதிகம் செய்திகள் பரப்பட்டன, ஆவா குழு பற்றிகூட அச்சம் கிளப்பட்டது, 2015 – 2017 காலப்பகுதிக்கு பின்னர் அது பற்றி பேசப்படவில்லை. அதன்பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி கதைக்கப்பட்டது, ” – என்றார்.
