வட்டவளை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள காளி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வீதியை மூடுவதற்கு தோட்டதுரை முன்னெடுத்த முயற்சியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது.
தோட்டத்தில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வீதியை மூடுவதற்கு வட்டவளை பொலிஸாரின் ஆதரவுடன் தோட்டதுரை நடவடிக்கை எடுத்துவருகின்றார் என சுட்டிக்காட்டி, அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
பல தசாப்தங்களாக இங்கு வழிபாடு நடத்தப்பட்டுவந்த நிலையில், தோட்டதுரை தற்போது இனவாத நோக்கில் செயற்படுகின்றார் எனவும் தோட்ட மக்கள் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு தோட்ட மக்கள் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம், அமைச்சர் வினவியுள்ளார்.
பாதையை மூடுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதுகாப்பு வழங்கிவருகின்றார் என மக்கள் சுட்டிக்காட்டிய விடயத்தை தெரிவித்து, இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
சட்டவிரோதமான முறையில் பொலிஸ்நிலை பொறுப்பதிகாரி தோட்ட நிர்வாகத்துக்கு பாதுகாப்பு வழங்கிவருகின்றார் எனவும், மக்கள் கொந்தளித்தால் அதற்கு பொலிஸ்தான் பொறுப்புகூற வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹட்டன் எஸ்.எஸ்.பி. அங்கு சென்று, வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் கம்பி போடும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் பிரச்சினை இருப்பின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பிரதிநிதியாக, அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி தோட்டத்துக்குச் சென்று, மக்களுடன் நின்று – கலந்துரையாடி – பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.