மதுரட்ட பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வலப்பனை மஹ உவா தோட்டத்தைச் சேர்ந்த 466 தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியாள் உற்பத்தி முறையின் மூலம் தொழில் செய்யும் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து கொழுந்தினைப் பெற்றுக் கொள்ளும் தோட்ட நிருவாகம் ஒரு கிலோ கொழுந்துக்கு 85 ரூபாய், 70 ரூபாய்,50 ரூபாய், 45 ரூபாய் என்ற வெவ்வேறு வித்தியாசத்தில் விலை நிர்ணயிக்கப்படுவதால்
தான் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதாக தோட்டத்து தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாஹ உவா தோட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. இந்த நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரே மாதிரி தேயிலை கொழுந்துக்கான விலையை நிர்ணயிக்கக் கோரியே தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் தமது தோட்டத்தில் பறிக்கப்படுகின்ற தேயிலைக் கொழுந்தை மாஹ உவா தேயிலைத் தொழிற்சாலைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்திடம் தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் முன் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு இயக்குநர் சந்திரன் தலைமையான குழுவினர் தோட்ட பொது முகாமையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படாத காரணத்தினால் தொழிலாளரின் இந்தப் போராட்டம் தொடர்பில் பிரதேச உதவி தொழில் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இந்த நிலையில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.