“வாக்களித்த தொழிலாளர்களா? பதவி கொடுத்த அரசாங்கமா? என்றால், “அரசாங்கம் தான்!” என கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மலையக பிரதிநிதிகளே இன்று உள்ள அரசாங்கத்தில் உள்ளனர். ” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான முழு அதிகாரமும் நிதி அமைச்சருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் முழு சுமையும் தொழிலாளர் மீது சுமத்தப்படபோகின்றது என்பது வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டது.
எனினும், வாக்களித்த தொழிலாளர்களா?, பதவி கொடுத்த அரசாங்கமா? என்றால் அரசாங்கம் தான் என கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மலையக பிரதிநிதிகளே இன்று உள்ள அரசாங்கத்தில் உள்ளனர்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்நிதியங்களில் நாட்டில் உள்ள 25 லட்சம் வரையிலான தொழிலாளர்களின் சேமிப்பே உள்ளது. ஒருவர் உழைக்கும் போது, தனது ஓய்வு காலத்திற்காக தன்னுடைய உழைப்பில் இருந்து சேமிக்கும் நிதியே இதுவாகும். அதனை வெட்டி குறைப்பது என்பதோ, அல்லது அதற்கான வருவாய்களை குறைப்பது என்பதோ தொழிலாளர்களின் உழைப்பை சூறையாடுவதாகும். அதனையே அரசாங்கம் செய்யப்போகிறது.
இந்த 25 லட்சம் தொழிலாளர்களின் நிலை, மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டும் நிலையாகவே உள்ளது. அதிலும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலைமை, மரத்தில் இருந்து விழுந்தவனை யானை மிதிக்கும் நிலையாக, மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெருத்தோட்ட தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற கூலி வழங்கப்படுவதில்லை என்பது நாடே அறிந்த விடையம். அதிலும், அக்கூலியில் இருந்து குறைத்து சேமிக்கப்படும் சேமலாப நிதியத்தையும் அரசாங்கம் தனது தேவைக்காக எடுத்துக்கொள்வது மிகப்பெரிய அநியாயம் ஆகும். பெருந்தோட்ட தொழிலார்களிடமிருந்து மாதா மாதம் சந்தாவை பெற்றுக்கொள்கின்றனர், அதில் லட்சக்கணக்கான வருமானம் பெறுகின்றனர். மறுபக்கம் அவர்களின் வாக்குகளை பெற்று பதவிகளையும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் தொழிலாளரின் உரிமை பறிக்கப்படும் போது, அவர்களுக்கு அநியாயம் நடக்கும் போது, அதையெல்லாம் செய்பவர்களோடு சேர்ந்து, பதவிக்கும், வசதிக்கும், சலுகைக்குமாக அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதையே அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளின் வேலையாக செய்து வருகின்றனர். இப்போதாவது மக்கள், முதலாளிகளோடு யார் உள்ளார்கள், தொழிலாளர்களோடு யார் உள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் மிச்சம் மீதியுள்ள கொஞ்சமும் கைவிட்டு போய்விடும். ” என்றார்.