பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்று, சஜித் பிரேமதாச பிரதமரானால் மாத்திரமே இந்த நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித்தான். அவர் பிரதமரானால் மாத்திரமே நம்மால் நிம்மதியாக வாழமுடியும்.
தோட்டத்தில் பிறந்து, வளர்ந்து மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்ட ஒருவர்தான் தலைவராக வரவேண்டும் என தொடர்ச்சியாக கூறிவருகின்றேன். எமது சங்கத்துக்கும் அப்படியானவர்தான் தலைவராக வருவார். நான் தோட்டத்தில் பிறந்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, வளர்ந்தவன்.
வாக்கு என்ற பலம் உங்களிடம் உள்ளது. அந்த பலம்தான் மலையகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது. எனவே, சேவை செய்யக்கூடியவர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.