” பொருளாதாரம் தொடர்பில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கின்றோம் . மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள். ஆனால் உரிமையை பறிப்பது (சிவில் உரிமைகள்) பற்றி அவர்கள் (எதிரணி) கதைக்கின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளது. மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நாம் விரும்பவில்லை. நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது என நம்புகின்றோம். அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு , அஸ்வெசும கொடுப்பனவு மும்மடங்காக அதிகரிப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை வரவேற்கின்றோம்.
பொருளாதாரம் தொடர்பில் எமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். உரிமையை இல்லாது செய்வது பற்றி (பிரஜா உரிமை) கதைக்கின்றனர். திட்டமிட்ட அடிப்படையில் சேறுபூசுகின்றனர். இவ்வாறு சேறு பூசுபவர்களுக்கு பதிலளிக்க வேண்டுமா? சேறு பூசுபவர்களின் கரங்களில்தான் நிச்சயம் சேறுபடும்.
உரிமையை இல்லாது செய்வது பற்றி பேசுபவர்கள், மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தி, நாட்டுக்காக கடமையை நிறைவேற்றியுள்ளோம். இல்லாது செய்வதைவிட உரிமையை வழங்குவது கடினம் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.