விடாது பெய்கிறது மழை! முல்லைத்தீவு மாவட்டத்தில் 3, 463 பேர் பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடை விடாது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முத்து ஐயன்கட்டுக் குளம் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. முத்துயன்கட்டு, பேராறு, முத்துவிநாயகபுரம், பண்டாரவன்னி, வசந்தபுரம், மன்ன கண்டல் ஆகிய கிராம மக்களை மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதியில் வெள்ளநீர் வீதியை குறுக்கறுத்து பாய்வதால் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மதவளசிங்கன் குளம் இரண்டு அடி வான் பாய்கிறது.

இதனால் பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு, முறிப்ப பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தண்ணி முறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்களும்அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம் கொக்காவில்வீதியில் மருதங்குளம் ஐயன்கன்குளம் வான் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புளியமுனை விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல முடியாது வீதிகள் வெள்ளத்தில்மூழ்கியுள்ள நிலையில் படகு சேவை மூலம் மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்துவருகின்ற
நிலையில் முல்லைத்தீவு மாவட்டமக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles