வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் முதல்முறை சம்பியன் பட்டத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (03) இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி 11 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்போதும் 204 வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு அதன் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை விளாசி வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும் அந்த அணி இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம் தோல்வியை சந்தித்தது.

மறுபுறம் பெங்களூர் அணி 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் ஒன்றில் கூட வெற்றியீட்டவில்லை.

இதில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் வீரராக மூன்று ஐ.பி.எல். அணிகளை இறுதிப் போட்டி வரை வழிநடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 இல் அவரின் தலைமையில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு கடந்த ஆண்டு கொல்கத்தா அணி அவரின் தலைமையில் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இந்நிலையில் அஹமதாபாத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடனேயே களமிறங்கவுள்ளன. ஐ.பி.எல். லீக் போட்டிகள் முடிவில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் இரு அணிகளும் முறையே 1 மற்றும் 2 ஆவது இடத்தைப் பிடித்தன.

சரியாக இரு அணிகளும் 14 லீக் போட்டிகளிலும் தலா 9 வெற்றி, 4 தோல்விகளை பெற்றதோடு, இரு அணிகளதும் தலா ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. இரு அணிகளின் ஒட்ட விகிதத்தில் கூட சிறிய வித்தியாசமே இருந்தன.

பெங்களூரில் நடந்த லீக் போட்டியில் பெங்களூர் அணியை பஞ்சாப் வீழ்த்தியதோடு பதிலுக்கு முல்லன்பூரில் நடந்த பஞ்சாபுக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூர் அணி வெற்றியீட்டியது.

Related Articles

Latest Articles