“ மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளமை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது ஒரு சாதனையாகும். எத்தனை கூட்டணி எதிர்த்து நின்றாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி.”
இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் வெற்றி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இராதாகிருஸ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மோடியை தோற்கடிப்பதற்காக செயற்பட்ட போதிலும் அதனை எல்லாம் தகர்த்து மக்களின் வாக்குகளை பெற்று மூன்றாவது முறையாகவும் பிரதமராக வெற்றி பெற்றிருக்கின்றமையானது அவருடைய சேவைக்கும் மக்கள் அவர் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும்.
நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளில் இந்தியாவின் பெயரையும் புகழையும் அதன் பொருளாதாரத்தையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ள பெருமை அவரையே சாரும்.
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்த பொழுது உடனடியாக உதவிகளை செய்து எங்களுக்கு உணவளித்தவர் பிரதமர் மோடி என்று சொன்னால் அது மிகையாகாது.அது மாத்திரமன்றி இன்னும் பல உதவிகளை இன்றும் செய்து வருகின்றார்.
குறிப்பாக மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்த ஒரே இந்திய பிரதமர் மோடி இங்குள்ள மக்களின் வீடமைப்பு உட்பட பல விடயங்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை செய்து வருகின்றார். இந்திய வம்சாவளி மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் நான் இருக்கின்றேன் என்ற நம்பிக்கையை கொடுத்தவர்.
இந்த தேர்தலில் ஒரு சில பின்னடைவுகள் இருந்தாலும் அவற்றை நாம் பெரிதாக கணக்கில் எடுக்க முடியாது.காரணம் அது எல்லா நாடுகளிலும் இருக்கின்ற ஒரு நிலைமை.ஏன் எங்கள் நாட்டிலும் ஒரு காலத்தில் நாட்டின் கடவுளாக பார்க்கப்பட்ட பலர் இன்று அரசியல் களத்தில் நிலை கொள்ள முடியாமல் தடுமாறி வருவதை நாம் காண்கின்றோம்.
இந்திய நாட்டில் இந்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்த பெருமையும் பிரதமர் மோடியையே சாரும்.எனவே அவருடைய வெற்றிக்கு மலையக மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கையின் வீடமைப்பு தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
