சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கால கடூழிய சிறை தண்டனை 2021 ஜனவரி மாதம் விதிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே குறித்த தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன்பின்னர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தார்.
இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் பல தரப்புகளும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தன.
இந்நிலையில், ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரையை நீதி அமைச்சர் ஜனாதிபதிக்கு கடந்தவாரம் அனுப்பியிருந்தார்.
” ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தண்டனை, அரசியல் பழிவாங்கல் அல்ல, நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்காக ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புகோரி, நீதிமன்றத்துக்கு சத்தியக்கடதாசியொன்றை வழங்க வேண்டும்.” – என நீதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி நீதிமன்றத்தின் மன்னிப்பு கோரும் ஆவணத்தையும் ரஞ்சன், தனது சட்டத்தரணி ஊடாக தயார் படுத்தியுள்ளார். இதற்கமையவே இவ்வாரம் அவர் விடுவிக்கப்படவுள்ளார்.