ஹட்டனில் பள்ளிவாசல் காவலாளியைக் கொலை செய்தவர் கைது!

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய சி.எம். இப்ராஹிம் என்பவரை தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் பள்ளிக்குள் வருவது உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன் கைது செய்வதற்கான விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் சந்தேக நபரான முகைதீன் பாவா லாபீர் (வயது-45) என்பவரை சம்மாந்துறை பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை(19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 27.01.2022 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து 3 மாதங்களுக்கு முன்னர் தப்பி சென்று தலைமறைவாகி இருந்த நிலையில் ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரை கொலை செய்து அங்கும் கொள்ளையடித்து தலைமறைவாகி இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நபருக்கு சாய்ந்தமருது, பொத்துவில் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை தொடர்பாக முறைப்பாடுகள் உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles