ஹற்றன் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து விலகி, 2021 கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இம்மாணவன், தரம் பத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்த மாணவனே இடையில் விலகி, இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
ஹற்றன் வில்பிரட் பிரதேசத்தில் வசிக்கும் பொரள லியனகே உஜித சித்மால் இரஞ்சின் (16) எனும் மாணவனே,இச்சாதனையை புரிந்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் எட்டுவருடங்கள் கல்வி கற்று 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இம்மாணவன்,கினிகத்தேன மத்திய மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளை பெற்று சித்தி அடைந்தவராவார். பின்னர் இம்மாணவன் தரம் ஒன்பதிலிருந்து தரம் பத்தின் காலாண்டு வரை,ஹற்றன் ஸ்ரீபாத தேசிய கல்லூரியில் கல்வி கற்றார்.
பின்னர்,2021 ஆம் ஆண்டு பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் பாடசாலையிலிருந்து விலகி 2021 ஆம் ஆண்டு க .பொ. த சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றியே சாதனையை புரிந்தார்.
குறித்த மாணவன் கருத்து தெரிவிக்கையில் , எனது பெற்றோரிடம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என கூறினேன். அரச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அங்கு கல்வி கற்கும் போது தனிப்பட்ட ரீதியில் பரிட்சைக்கு தோற்ற முடியாது என்பதால் நான் பாடசாலையில் இருந்து விலகி ,க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களை முழுமையாக தயார் செய்து பரீட்சைக்கு தோற்றினேன்.முழுமையாகக் கவனம் செலுத்தி இப்பெறுபேறுகளைப் பெற்றேன் என தெரிவித்தார்.
மேலும்,தான் இப்போது க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்ற தயாராகி வருகின்றதாகவும் தெரிவித்தார்.