ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு எதிராக மைதானத்தில் போராட்டம்!

ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தீர்ப்பின் மூலம், உதைப்பந்தாட்ட கழகமொன்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி, யம் மேட்ஸ் விளையாட்டு கழக வீரர்கள், இன்று (06.03.2021) ஹட்டன் டன்பார் மைதானத்தில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டனில் உதைப்பந்தாட்டத்தை பாதுகாப்போம், குற்றத்தை வளர்ப்பவர்களை வெறுக்கிறோம், ஒரே கிண்ணத்திற்கு இரண்டு சட்டங்களா?, தலைவரின் இறுதி முடிவு செல்லுபடியற்றதா? போன்ற வாசகம் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு சுகாதார பொறிமுறைக்கமைய அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதைப்பந்தாட்ட தொடரொன்று கடந்த வருடம் நடைபெற்றது. இதன்போது யம் மேட்ஸ் விளையாட்டு கழகம், ஸ்மோல் டிரேட்டன் விளையாட்டு கழகம் ஆகியவற்றுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதனை விசாரணை செய்த ஹட்டன் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று குழு,

ஒரு விளையாட்டு வீரர் பதிவு செய்யப்பட்ட ஒரு கழத்திற்கு மாத்திரமே விளையாட வேண்டும் எனவும்,  காலிமுத்து கிசாந்தன் என்பவர் இரண்டு கழங்களில் விளையாடி விதிமுறைகளை மீறி செயற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இரண்டு கழகங்களையும் 2020.01.31. இருந்து 2021.01.31 வரை தடை செய்யப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ் நிலையில் அதே அட்டன் தலைவர் கிண்ண இறுதி போட்டிக்கு ஒரு குழுவினை மாத்திரம் மீண்டும் இணைத்துக்கொண்டு இதில் யம் மேட்ஸ் கழகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக விளையாட்டு வீரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து தாங்கள் நீதி மன்றத்தினை நாடி தடை உத்தரவு ஒன்றினை பெறப்படவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles