தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1700 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஷாநாயக்க வரவு செலவு உரையில் தெரிவித்திருந்தார். இதுவரை அது சம்பந்தமான முன்னேற்றங்கள் எதுவும் நடந்திருப்பதாக தெரியவில்லை. என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். பெருந்தோட்ட நிறுவனங்கள் கூறுவது போல உற்பத்தி அதிகரிப்பு அடிப்படை என்பது தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமையை அதிகரிப்பதாகும். இதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
வாழ்க்கை சுமையை குறைக்கும் சம்பள அதிகரிப்பு வேறு, உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்காக வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வேறு. தற்போது நாம் எதிர்பார்ப்பது வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்கான அடிப்படை சம்பள அதிகரிப்பேயாகும். பெருந்தோட்டத்துறையில் காணப்படுகின்ற மனித வளத்தை முறையாக முகாமை செய்து அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படாதனாலேயே அதிகளவானோர் இத்துறையை விட்டு வெளியேறிவிட்டனர்.
தேசிய மக்கள் சக்தி அரசு தமது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான அழுத்தங்களை பெருந்தோட்ட கம்பனிகளின் மீது பிரயோகிக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல்களுக்கு முன் 2000 ரூபா என்றும் தேர்தலுக்குப் பின் 1700 ரூபா என்றும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றது. அதேபோல தேர்தல் கால மேடைகளில் மலையக மக்கள் மீது காட்டிய கரிசனைகள் தற்போது காணாமல் போய்விட்டன.
கொழும்பு ஹோட்டல்களிலும், கொழும்பில் உள்ள வீடுகளிலும் வேலை செய்பவர்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை. அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலத்திலேயும் அதே வேலையை தான் செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தகுதியை மாற்றப் போகின்றோம் என்று வாக்குறுதி அளித்த அரசு இன்று அதை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களைக் கேவலப்படுத்துவதற்கு சமமான செயலாகும்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை நாட்டின் அரசாங்கங்கள் ஒதுக்கி ஓரங்கட்டப்படுவதை இந்திய அரசுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் எடுத்துரைத்ததன் விளைவாகவே கல்வி வீடமைப்பு சமூக அபிவிருத்தி போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கு மலையகத்திற்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கி வருகின்றது.
இந்த நிதியை வரவு செலவுத் திட்டத்தில் கூட்டிக் காட்டுவதன் ஊடாக தாம் மலையக மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அரசு காட்டமுப்படுகிறது. எம்மை இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் பராமரிக்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும்.
தப்படித்து தாளம்போட்டு மலையக பிரகடனத்தை வெளியிட்டால் மட்டும் போதாது. அதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வந்திருக்கிறது என்பதை எதிர்வரும் எட்டு மாதங்களில் அறியக் கூடியதாக இருக்கும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்று கொடுத்து அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி காட்ட வேண்டும். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
