’10- அடி நீளம்; 2-டன் எடை’ – வலையில் சிக்கி ராட்சத “உடும்பு சுறா” !

கன்னியாகுமரியில் மீனவர் வலையில் 2 டன் எடை கொண்ட ராட்சத அரிய வகை சுறா ஒன்று சிக்கியது. இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மெல்பின். இவர் தனது பைபர் படகில் சக மீனவர்கள் 3-பேருடன் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் வந்த ராட்சத சுறா மீன் அவர்களின் பைபர் படகை மோதி தாக்கியுள்ளது. இதில் மீனவர்கள் நிலை தடுமாறிய நிலையில் அந்த சுறா மீன் மீனவர்கள் விரித்திருந்த வலைக்குள் சிக்கி கொண்டது. ராட்சத சுறா என்பதால் பைபர் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலையில் வலையோடு இழுத்தபடியே மீனவர்கள் பைபர் படகை ஓட்டி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

பின்னர் விசைப்படகில் உள்ள கிரேன் மூலம் கரை சேர்த்த நிலையில் அந்த சுறா மீன் 10-அடி நீளமும் 2-டன் எடையும் கொண்ட அரிய வகை “உடும்பு சுறா” என்பது தெரிய வந்தது. இந்த சுறா மீனை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்ற நிலையில் சிறுவர்கள் அதன் மீது ஏறி அமர்ந்து விளையாடியும் புகைப்படம் எடுத்தும் சென்றனர்.

பைபர் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஒரு நாள் சுமார் 5-ஆயிரம் முதல் 10-ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வரும் நிலையில் இன்று அந்த பைபர் படகில் சிக்கிய ஒத்த சுறா 1-லட்சம் ரூபாய்க்கு விலை போனதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles