பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் இடைக்கால கணக்கறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது இரு பிரதான கட்சிகளும் உறுதியளித்தன. தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கமும் வந்துள்ளது. ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இது வேதனைக்குரிய விடயமாகும்.
பொதுத்தேர்தல் ஊடாக ஜனாதிபதியின் கரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.” -எனவும் அரவிந்தகுமார் வலியுறுத்தினார்.