பசறை பரமான்கட பகுதியில் நேற்று (30) மாலை புதையல் தோண்டிய இருவர் மாணிக்க கற்கள் என சந்தேகிக்கப்படும் கற்கள் மற்றும் பழங்காலப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 74 மற்றும் 26 வயதுடைய புலுகஹந்திய, ஹெட்டிமுல்ல கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மாணிக்க கற்கள் என சந்தேகிக்கப்படும் 11 கற்கள், சிறிய மஞ்சுசாலை, ஒன்றரை அடி உயர பித்தளை புத்தர் சிலை மற்றும் ஒரு அடி உயரத்தில் மூன்று பித்தளை யானை உருவங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் பழங்கால பொருட்களை தேடி குறித்த இடத்தில் 16 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸார் மற்றும் ஆக்கரத்தன்ன விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த இடத்தில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பொருட்களை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா