“அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று ஒருபோதும் அதிகாரங்களைப் பகிரமாட்டோம். தற்போது அமுலில் உள்ள அதிகாரப்பகிர்வு நடைமுறை அவ்வாறே தொடரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) திட்டவட்டமாக அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டிலுள்ள அனைத்து இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்த வேண்டும். குறிப்பாக நாட்டில் தீப்பிழப்புகளை உருவாக்குவது அல்ல ஆட்சியாளர்களின் கடமை. ஏதேனும் பிரச்சினை, முரண்பாடுகள் உருவாகவிருந்தால், அவற்றை தீர்த்துவைத்து, பாதகமான விளைவுகளை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதுதான் ஆட்சியாளர்களுக்கான கடப்பாடாகும்.
ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாம் அதிகாரங்களைப் பகிர்வோம். இதுவரையில் நடைமுறையில் இருந்ததை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எனவே, 13 பிளஸ்சும் இல்லை, 13 மைனசும் இல்லை என்பதை கூறியாகவேண்டும்.
வெளிநாடுகளுக்கு இராஜதந்திர பணயம் மேற்கொள்ளும்போது பிளஸ் என்றும், விமான நிலையம் திரும்பியதும் மைனஸ் என்றும்கூறும் அரசியலை நாம் முன்னெடுக்கமாட்டோம். எம்மிடம் உறுதியான நிலைப்பாடு உள்ளது. எனவே, எவருக்கும் வளைந்துக்கொடுக்காத எமது பயணம் தொடரும். தெளிவான அரசியல் மற்றும் ஆட்சிக்கொள்கை எம்மிடம் உள்ளது.” – என்றார்.