பசறை பஸ் விபத்தில் பெற்றோரை இழந்துள்ள மூன்று பிள்ளைகள் தமது அடிப்படை உரிமையை முன்னிலைப்படுத்தி, உயர் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கெதிராகவே, இம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 20ந் திகதி பசறை – லுணுகலை பிரதான பாதையில் 13ம் மைல் கல்லருகே, மேற்படி பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 14 பேர் பலியானதுடன், 30 பேர் காயங்களுக்குள்ளாகினர்.
இவ்விபத்து ஏற்பட, பாதையருகே இருந்த பாறைக்கல் அகற்றப்படாமை, பாதை குறுகியமை காரணமாக இருந்ததுடன், இதற்கு பதில் கூறக்கூடிய வீதி அபிவிருத்தி அதிகார சபை கவனயீனமாக இருந்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டே அவ் அதிகார சபைக்கெதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இவ்விபத்தில் 9, 8, 4 ஆகிய வயதுகளைக் கொண்ட மூன்று பிள்ளைகள் பெற்றோரை இழந்த நிலையில், தமது தாத்தா, பாட்டி ஆகியோரின் பராமரிப்புக்களில் இருந்து வருகின்றனர்.
இப்பிள்ளைகள் சார்பாக, அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது, குறிப்பிட்ட பஸ்சை செலுத்திய சாரதியும் நேற்று முன்தினம் மாரடைப்பினால் மரணமாகியமையும், குறிப்பிடத்தக்கது.
