14 லட்சம் ரூபாவுடன் மாயமான அதிவேக வீதி காசாளருக்கு நேர்ந்த கதி!

தெற்கு அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு காசு கருமபீடங்களிலிருந்த சுமார் 14 இலட்சம் ரூபாவுடன் மாயமான காசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில் வைத்து, பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி, களனிகம இடைமாறல் அலுவலகத்தில் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாவுடன் பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர் மாயமாகியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், திருடப்பட்ட பணத்தில் 3 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், அக்காசாளர் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் சிறிது சிறிதாக பெட்டகத்திலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்கள் பிரகாரம், கைது செய்யும்போது சந்தேக நபரிடம் 5 ஆயிரம் ரூபா மட்டுமே இருந்ததாக கூறினார்.

திருடிய பணத்தில் 5 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் தனது தனிப்பட்ட கடன்களை மீள செலுத்த பயன்படுத்தியுள்ளதாகவும், அவ்வாறு கடன் மீள செலுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இரு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும் அடங்குவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் கடன் மீள செலுத்தப்பட்டவர்களிடம் இருந்து பொலிஸார் ஒரு தொகை பணத்தை மீட்டுள்ளனர். எஞ்சிய பணத் தொகையை சூது விளையாடியதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles