புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொட, கட்டுகித்துல பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டத்தை பார்வையிட வருகை தந்து, பின்னர் ரிதிகம பிரதேசத்தை நோக்கி பயணிக்கும் வழியிலேயே வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் குறித்த வேன் வீழ்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு பெண்கள், இரண்டு வயது குழந்தை, வேன் உரிமையாளர் என குறித்த வேனில் ஏழு பேர் பயணித்துள்ளனர்.
இவர்களில் மொஹமட் அனிஸ் ஆதில் என்ற இரண்டு வயதான குழந்தை மற்றும் எஸ்.எல்.எம்.அமீர்தீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஏனைய ஐவரும் படுகாயம் அடைந்த நிலையில் புசல்லாவை, வகுவப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மொஹமட் பீபீ (வயது 60) என்ற வயதான பெண் சிகிச்சை பலனின்றி (14) இரவு உயிரிழந்துள்ளார். ஏனையோர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் விபத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தையின் தாயான ரிப்னா (வயது 30) குழந்தையின் தந்தை உட்பட வேன் உரிமையாளர் மற்றும் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆ.ரமேஷ்
		
                                    









