மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. நாளாந்தம் குறைந்தபட்சம் இரண்டு சம்பவங்களாவது பதிவாகின்றன. இந்நிலையில் 18 குளவிக்கூடுகளை கடந்தே நாளாந்தம் மஸ்கெலியா, முத்துமலை தோட்ட மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு குளவிக்கூடுகள் இருப்பதால் அச்சத்துக்கு மத்தியிலேயே செல்வதாகவும், அவற்றை அகற்றி பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
” மஸ்கெலியா நகருக்கு செல்லும் பிரதான பாதையிலேயே இவ்வாறு குளவிக்கூடுகள் காணப்படுகின்றன. இதனால் நகருக்கு செல்லும் மக்களும் நகர பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் பயணிக்கின்றனர். பல தடவைகள் குளவிக்கொட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ” – என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக குறித்த வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் ராஜ்அசோக் கருத்து வெளியிட்டபோது, இக்குளவிக்கூடுகளை அகற்றுமாறு ஏற்கனவே பிரதேச சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மஸ்கெலியா பிரதேச சபையோ அல்லது தோட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமை வருத்தமளிக்கின்றது.” – என்றார்.
நீலமேகம் பிரசாந்த்