18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 55 வீதமானோருக்கு ஒரு அலகு தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டுள்ளது. 25 வீதமானோருக்கு இரண்டு அலகு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதாவது நாட்டிலுள்ள சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் தடுப்பூசி திட்டத்தை பூர்த்தி செய்து பாதுகாப்பு பெற்றுள்ளனர்.
அத்துடன், செப்டம்பர் முதல் வாரத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 அலகு தடுப்பூசிகளையும் வழங்குவதே எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். 30 வயதுக்கு மேற்பட்டோரில் 99 வீதமானோருக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் 48 வீதமானோர் இரண்டு அலகுகளையும் பெற்றுள்ளனர். ஒரு தடுப்பூசியால் முழுமையான பாதுகாப்பு கிடைக்காது. எனவே, இரண்டு அலகு தடுப்பூசிகளையும் பெற வேண்டும்.
அதன்பின்னர் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி பெறாத சிலரும் உள்ளனர். அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மரணத்தை தடுப்பதும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுமே தடுப்பூசி வழங்குவதன் பிரதான நோக்கம்” – என்றார்.
