ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு நேற்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
19 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி இழந்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
19 ஆவது திருத்தம் பொதுமக்கள் கருத்து கணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கிய போதிலும் இதுவரை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு உட்பட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகிவருவதுடன் 19 ஆவது திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றாமல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணான செயலாகும் எனவும் மனுதாரர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு, நாட்டின் அரசியலமைப்பை மீறி 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அங்கீகரிக்காமல் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் கருதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தும்படி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் தமது மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் டலஸ் அழகப்பெரும சபையில் நேற்று கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரவுள்ள இறுதி கட்டத்தில் தேர்தல் தொடர்பில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இப்படியான சூழ்ச்சி நடவடிக்கையை எப்படி தடுத்து நிறுத்துவது? – என்பதே டலஸின் கேள்வி.
“அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்வரை, அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அரசமைப்பு மீறல் என தீர்ப்பு வழங்குமாறுகோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் எல் எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபரே உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். தற்போதும் எல் எழுத்தை உடைய நபரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் சமூகத்தில் நம்பகத்தன்மையற்ற நிலை உருவாகும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இன்னும் நான்கு நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளது.
பிரஜைகளுக்கு நீதிமன்றத்தை நாடுவதற்கு உள்ள உரிமையை நான் சவாலுக்குட்படுத்தவில்லை. ஆனால் இறுதி கட்டத்தில் – நேரத்தில் நம்பகத்தன்மையற்ற நிலையை உருவாக்குவதற்கு சூழ்ச்சி செய்யப்படுகின்றது.” – எனவும் டலஸ் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச , நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்க கூடாது என வலியுறுத்தினார்.
“ 2015 ஜனாதிபதி தேர்தலின்போது அரசமைப்பு மறுசீரமைப்புக்கு மக்களிடம் ஆணை கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதிக்கான பதவி காலத்தை ஆறில் இருந்து ஐந்தாக குறைத்தல், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்தாக நிர்ணயித்தல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தல் போன்ற திருத்தங்களும் அவற்றில் உள்ளடங்கும். அவற்றை அடிப்படையாகக்கொண்டே 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்களை விசாரணைக்கு உட்படுத்திய உயர்நீதிமன்றம், அரச தலைவராக பிரதமர் இருத்தல் வேண்டும் என்பது உட்பட நான்கு விடயங்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து மேற்படி நான்கு விடயங்களும் கைவிடப்பட்டது.” – என நீதி அமைச்சர் விஜயதாச குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை பதவிகாலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தர்க்கம் முன்வைக்கப்பட்டது. ஆறு வருடங்களை ஏழாக்குவதாக இருந்தால்தான் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், ஐந்தாக குறைப்பதற்கு அவசியமில்லை என தெளிவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
எனவே, 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஒருநாள்கூட ஜனாதிபதியால் அப்பதவியில் நீடிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்தாலும், நாடாளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட்ட இடைக்கால ஜனாதிபதியாக இருந்தாலும் இது பொருந்தும்.” எனவும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கையை நகைச்சுவைக்கு உள்ளாக்கும் வகையில் சிலர் செயற்படுகின்றனர். ஜனாதிபதியின் பதவிகாலத்தை ஆறாக கருதுமாறுகோரி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தை நகைச்சுவைக்கு உட்படுத்தும் வகையில் செயற்பட முடியாது. சட்டம் தெரிந்த சில சட்டத்தரணிகளும் இப்படியான வழக்குகளில் முன்னிலையாகி தர்க்கங்களை வெட்கமின்றி முன்வைக்கின்றனர். நீதிமன்றமும் தனது பக்கச்சார்பற்ற தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்கள் ஐந்தாண்டுகளுக்குதான் ஆணை வழங்குகின்றர் எனில் அந்த காலம் முடிந்ததும் கௌரவமாக வெளியேற தெரிந்துகொள்ள வேண்டும்.” – எனவும் நீதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.