’19’ நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிக்கப்படாது!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிக்கப்படமாட்டாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு நாட்டு மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்களின் ஒத்துழைப்புடன் அதற்கான பணிகள் சுயாதீனமாக இடம்பெறும். அதற்கு முன்னர் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும். ஏனெனில் அதில் பல குறைப்பாடுகள் உள்ளன.
19ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியின் பதவிகாலம் 6 வருடங்களாக இருந்தது. 19மூலம் அது ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது. 19 ஐ நீக்கினால் பழைய நிலைமை திரும்பும். ஆனாலும் 5 வருடங்கள் பதவியில் இருப்பதற்குதான் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதில் மாற்றம் செய்யக்கூடாது என ஜனாதிபதி அறிவித்துவிட்டார். எனவே, ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிக்கப்படாது.
அத்துடன், அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதி பதவியை நபரொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே வகிக்கலாம் என்ற வரையறை மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். எனவே, இரண்டு தடவைகள் என்ற நிலைமை உருவாக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles