1992 – 2022 இலங்கை அணியின் சாதனை வெற்றி!

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, சொந்த மண்ணிலே ‘கங்காரு’களை அடித்து நொறுக்கி துவசம் செய்து,- இலங்கை ரசிகர்களின் மனங்களில் ஆனந்த அலைகளை மோதவிட்டு, இன்பக் கடலுக்குள் மூழ்க வைத்துள்ளது இலங்கை சிங்கங்கள்.

தொடர் தோல்விகளால், இலங்கை அணி இனி எப்போது மீண்டெழும் என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, புதிய நம்பிக்கையை அள்ளி வழங்கியுள்ளது இலங்கையின் இளம் அணி.

1992 இல் இலங்கை வந்திருந்த ஆஸி. அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்தியது.

அர்ஜுன ரணதுங்க இலங்கை அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கு அலன் போர்டரும் தலைமை வகித்தனர்.

கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில்  களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது. மார்க் டெய்லர் 94 ஓட்டங்களையும், டொம் மூடி 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 248 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

அரவிந்தடி சில்வா ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களை பெற்றார். இவரே ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். அணித் தலைவர் ரணதுங்க ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்றார். அசங்க குருசிங்க அரைச்சதமடிந்து (53) அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தார்.

கெத்தாராம மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவது போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. 42.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை இலங்கை அடைந்தது. முதல்  போட்டியில் சதமடித்து அசத்திய அரவிந்த 2ஆவது போட்டியில் அரைச்சதமடித்தார் (63). அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கி 52 ஓட்டங்களை பெற்ற ஹத்துருசிங்க ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

3 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸி. அணி  5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றி அடைந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 207 ஓட்டங்களைப் பெற்றது. 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸி. அணி வெற்றி இலக்கை அடைந்தது.

முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு அரவிந்தவின் துடுப்பாட்டம் பக்கபலமாக அமைந்தது.  அதேபோல 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்றதிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது.

1992 இல் கிடைக்கப்பெற்ற இப்படியான வெற்றியின் பிறகு இலங்கை மண்ணின் வைத்து ஆஸ்திரேலியாவை மடக்கி ஒருநாள் தொடரை இலங்கை வெல்வது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

Related Articles

Latest Articles