நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாக். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் அப்ரிடியின் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
முதலாவது டெஸ்டில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் அப்ரிடி சிறப்பாக செயற்பட்டார். அதில் அவர் 14.1 ஓவர்கள் பந்துவீசி 58 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியை 222 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது.
எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஏழு ஓவர்களே பந்து வீசினார். மூன்றாவது நாள் ஆட்டத்தில் அசௌகரியத்தை உணர்ந்த அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
எனினும் அவர் இந்த டெஸ்ட் தொடர் முடியும் வரை பாகிஸ்தான் அணியுடன் தொடர்ந்து நீடிக்கவுள்ளார். “அவர் ஆரம்ப சிகிச்சைகளை பெறவிருப்பதோடு அணியின் மருத்துவக் குழாத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்படவுள்ளார்” என்று பாக். சபையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
களத்தடுப்பில் பாய்ந்து பந்தை தடுக்க முயன்ற பின் அப்ரிடி அசெகரியமாக நடப்பதை பார்க்க முடிந்தது. பின்னர் அவரது முழங்காலில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் செய்யப்பட்டது. அவர் காலியில் எம்.ஆர்.ஐ சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.
அப்ரிடியின் வெளியேற்றம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹரிஸ் ரவுப் அல்லது பந்துவீச்சு சகலதுறை வீரரான பஹீம் அஷ்ரப் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூழல்பந்துக்கு சாதகமான காலியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இடம்பெறாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
அப்ரிடியின் காயம் அவர் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் 11ஆவது வேகப்பந்து வீச்சாளராக பதிவாவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது 99 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
