2 ஆயிரம் ரூபாவையாவது முறையாக வழங்கவும் – ராதா வேண்டுகோள்

” கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 10 நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த வாழ்வாதார கொடுப்பனவானது எவ்வித பாரபட்சமும் இன்றி வழங்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னனி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

” கடந்தமுறை 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டபோது, சில அதிகாரிகள் தமக்கு தேவையானவர்களுக்கே அத்தொகையை வழங்கினர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதுமட்டுமல்ல போராட்டங்களை நடத்தியே 5 ஆயிரம் ரூபாயை பெற வேண்டிய நிலைமையும் காணப்பட்டது.

எனவே, இம்முறை அவ்வாறு நடைபெறக்கூடாது. உரிய பொறிமுறை உருவாக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ” – எனவும் ராதாகிருஷ்ணன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles