மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சரத்துக்கள் எதுவும் உள்ளடக்கப்படாத எந்த தீர்வு திட்டங்களும் முழுமை பெறாது என்று எனது தந்தை சந்திரசேகரன் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அனுசா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது சமூகத்தின் தொழிற்சங்கம் தாண்டிய அரசியல் உரிமைகளுக்காக எனது தந்தை இலங்கையின் தேசிய கட்சிகளுடனும் வடகிழக்கு அமைப்புகளுடனும் , முஸ்லிம் தலைமைகளுடனும் தெளிவான திட்டங்களை முன்வைத்து கொள்கைப் போராட்டம் நடாத்தினார். அது போல் மலையகத்தின் அனைத்து அமைப்புகளையும் நேச சக்தியாக இணைந்து செயற்பட்டார்.
இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் இதனை ஒரு மலையக அமைப்பு ஆதரிப்பது பற்றியும் அங்கம் வகிக்காக உறுப்பினர்னள் எதிர்க்கவுள்ளமை பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் ஆதரிப்பதும் அல்லது எதிர்ப்பதும் ஒரு தெளிவான ஆரோக்கியமகன முடிவாக அமையாது.
குறிப்பிட்ட இந்த 20ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட்டால் இது எவ்வாறு எமக்கு சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை முதலில் இவர்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இது வெறுமனே அரசாங்கத்துக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்பதுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இதனை எதிர்க்கும் மலையக பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டால், அப்போதும் இவர்கள் எதிர்ப்பார்களா என்பது சந்தேகமே.
இது பதவிசார்ந்த சலுகை சார்ந்த விடயமல்ல என்பதனையும் பத்து லட்சத்துக்கும் இதிகமாக இந்நாட்டில் வாழும் எம் இனத்தின் உரிமைச்சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை இருசாராரும் ஏற்று செயற்பட வேண்டும்.
விளக்கமில்லாத போட்டி மனப்பான்மையால் எம் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தை கூட அதிகாரத்திலிருக்கும் போது பெறமுடியாமல் ஒருவரை ஒருவர் குற்;றம் சுமத்தி காலம் கடத்துவது போல இந்த விடயத்தில் மலையக பிரதிநிதிகள் முதிர்ச்சியற்ற முடிவினை எடுக்ககூடாது.
அரசாங்கம் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறுவதும் 20ல் என்ன இருக்கிறது என்பதனை தெரிந்த பின்னர், தான் முடிவு எடுப்போம் என்று கூறுவதும் இயவாமையின் வெளிப்பாடே ஆகும்.இதில் என்ன சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதனை அரசாங்கத்துக்கு வலியுருத்தும் தெளிவு இவர்களிடம் இருக்க வேண்டும்.
அதற்கு முன்னர் எமது சமூகம் என்னென்ன அரசியல் உரிமைகளுக்கு உரித்தானது என்பதில் நாம் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும். நாம் என்ன செய்தாலும் எமக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும் தேர்தல் காலத்தில் மக்களை திருப்திப் படுத்துவதற்கு தேவையானதை செய்தால் போதும் என்றும் வென்ற பின்னால் மக்கள் சகலதையும் மறந்து விடுவார்கள் என்றும் தப்புக்கணக்குப் போடுவது தற்காலிகமாக வெற்றியளிக்கலாம்.
ஆனால் இந்த துரோகங்களை மலையக வரலாறு தன்னுள் அழுத்தமாகப் பதிந்துக் கொள்வதை தடுக்கமுடியாது. ” – என்றும் அனுசா குறிப்பிட்டார்.