ஹப்புத்தளை -தம்பேதன்ன தோட்டத்தைச் சேர்ந்த மவுசாகல, தியகல, பண்டாரெலிய, புதுக்காடு, மாகந்த ஆகிய பிரிவுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டுமெனில் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகங்கள் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டத் தொழிலாளர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் இன்று வேலைக்குசென்றபோது, அவர்களுக்கு தொழில் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து தோட்ட நிர்வாகத்துக்கும், தோட்ட தலைவர்களுக்குமிடையில் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. எனினும் பேச்சு வெற்றியளிக்கவில்லை. 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு கம்பனிகள் விடாப்பிடியில் உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
” 20 கிலோ கொழுந்து பறிக்ககூடாது. ‘டிஜிட்டல்’ தராசு மாற்றப்படவேண்டும். அடாவடியில் ஈடுபடும் முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். தொழிலாளர்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தில் முகாமையாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் எமக்கு பாதுகாப்பு வழங்குவது யார்?” – என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.
கொழுந்து ஏற்றுவதற்கு தொழிலாளர்கள் அனுமதி மறுத்தனர் என்பதாலேயே வேலை நிறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.
நடராஜா மலர்வேந்தன்










