‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிபடுத்தியும் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்தும் நிகழ்வொன்று நாளை (24) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.00 மணிக்கு நுவரெலியா நகரில் ரீகல் திரையரங்குக்கு முன்பாக ஆரம்பமாகும் ஊர்வலம், சினிசிட்டா நகர மண்டபத்தை நோக்கிப் பயணிக்கும்.
இந்த ஊர்வலத்தின் போது, 5 ஊர்திகளின் பவனி நடைபெறவுள்ளது. இதில் மலையக மக்களை இலங்கைக்கு அழைத்து வந்த முதலாவது கப்பலான ஆதிலக்ஸ்மி கப்பல் வடிவமைக்கப்பட்டு ஊர்வலத்தில் இடம்பெறும்.
இதைத் தவிர, எமது மலையக மக்கள் வாழ்வு நிலைமை, படிப்படியாக பெற்றுக்கொண்ட வெற்றிகள் ஆகிய விடயங்களும் இந்த ஊர்வலத்தில் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ளைக்காரத்துறைமார் போன்ற வேடம் தரித்து குதிரையொன்றில் நபரொருவர் வருகை தருவார்.
பாடசாலை மாணவர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் தமது கைகளில் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் நடைபவனியாக வருவர்.
மலையக மக்களின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிலம்பம், காவடிதப்பு, பறை போன்ற வாத்தியங்களை இசைத்தவாறு கலைஞர்கள் இதில் பங்கேற்பர்.
இந்த ஊர்வலமானது புதிய கடை வீதி வழியாக தர்மபால சுற்றுவட்டத்தை கடந்து, நுவரெலியா – பதுளை வீதி வழியாக சினிசிட்டா நகர மண்டபத்தை அடையும். இதனை தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்வார்.
